காட்டு முள்ளில் பிஞ்சுப்பூக்கள்
பள்ளி விடுமுறையான
அது ஒரு கோடைகால முற்பகலில்
துவங்கிய
எங்கள் பயணம்..
தரிசு நிலங்களைத்
தங்க வயல்போல்
காட்சி கொடுக்கும் சீவுப்பத்தைகளின்
உவாம் பழ முட்களுக்கு
மத்தியில்
ஊடுருவும் பயணம்..
சுண்டு விரல் நீல
மொத்த
சுருட்டைப் பாம்பு
வீரியமிக்க விஷமுள்ள
விரியன் பாம்பு
கண்ணை கொத்தும்
கண்கொத்திப் பாம்புகள் கடந்து
வெட்ட வெளியில் செல்வோம் வெறுங்காலில் செல்வோம்!
கல்லோடு கல்லாய்
முள்ளோடு முள்ளாய்
மூன்று நான்கு என கிடைக்கும்
கௌதாரி முட்டைகளை
கையில் எடுப்போம்!
'எடுத்துப்போய்க் கொண்டே இருப்போம்'
எனவும் சொல்லலாம்..
கையில் வைத்தால் நசுங்கிவிடும்.
பையில் வைத்தால் உடைந்து விடும் .
உடை முட்டையின்
புடை நாற்றத்தில்
ஊளையிடும் நரிகள்
ஒன்று சேர்ந்து
நம்மை
ஒன்றுமில்லாமல் ஆக்க நேரும்!
காற்றில் பறந்து
காட்டுக்குள் வந்திருக்கும்
கள்ள சாராய பையை எடுத்து
தைல மர இலைகளை போட்டு
முட்டைகளை அதன் உள்ளே வைப்போம்!
என்னையும் அழைத்துச் செல் என்று
அடம் பிடித்த
எதிர்த்த வீட்டு சிறுவனின்
கையில் அதை கொடுத்து
எடுத்து வர சொல்வோம்...
காட்டுக்கும் ஊருக்கும்
நடுவில் இருக்கும்
கன்னிமாரி கோவில் வருவோம்!
இருக்கும் பெருந்துயரையெல்லாம்
இவள் தீர்த்து விடுவாளென்று
இருகரம் கூப்பி வணங்குவோம்!
ஒன்று இரண்டு சில்லறை இருக்கா
என்று,
ஓரக் கண்ணால் தேடியும் பார்ப்போம்...
ஒன்று இரண்டு இருந்தால்
எடுத்துக் கொள்வோம்!
இல்லையென்றால்
தீப்பெட்டியை மட்டும் எடுத்துக் கொள்வோம்....
காய்ந்த சுள்ளிகள் பொறுக்க இருவர்,
காயாத சாணி எடுக்க இருவர்,
முட்டையை எண்ணி பாதுகாக்க இருவர்
எந்த வேலையும் செய்யாமல்
இருப்பதற்கும் இருவர்.
தேடிச் சென்ற
தேவையான பொருட்கள்
காலடி வந்தவுடன்
கால் சட்டையில்
கையைத் துடைப்போம்..
உள்ளங்கை விரித்து
ஒருப்பிடி சாணி எடுத்து
ஒற்றை முட்டை அதில் வைத்து
விரல்கள் மூடி உருட்டி வைப்போம்!
காய்ந்த சுள்ளிகளை
தீ மூட்டி
சாணி உருண்டைகளை
அதில் வாட்ட
வட்டமாய் உட்கார்ந்து
வாயால் ஊதுவோம்
வறண்டு இருக்கும் தொண்டையோடு..
வெந்த முட்டைகள்
ஒவ்வொன்றாய்
வெளியில் எடுத்த பின்
இருப்பவர்களை எண்ணிப்பார்த்து
தலைக்கு மூன்றோ நாளோ
தவிர்க்காமல்
பிரித்துக் கொடுப்போம்!!
தன் பங்கு கிடைத்தவுடன்
தனித்தனியே ஓடிவிடுவோம்.
சுட்ட சாணிக்குள்ளிருந்து
முட்டை பிரித்து
உள்ளங்கையில் வைத்து
உஃப்...உஃப் என்று ஊதி
ஒரே மூச்சில்
உள்ளே தள்ளுவோம்!
கவுச்சையே ஆகாத
கன்னிமாரியை வணங்கி
காட்டை விட்டு வீடு வருவோம்!
#பகத்சிங்


Comments
Post a Comment