ஊர்க்குருவி
1 - எவனென்று_நினைத்தாய்!!
எங்களில் ஒருவனை
நண்பனாக்கி
எல்லாருக்கும் நல்லவனான
நரிகள் ஏராளம்!
நரிகளின் சூழ்ச்சியால்
கிணற்றில் விழும்
சிங்கங்கள் அல்ல நாங்கள்!
நாங்கள்
சமாதானச் சங்கிலியில்
கட்டப்பட்டுள்ள யானைகள்!
2 - மூடநம்பிக்கை
முகத்துக்கு முன்னால்
சிரித்து பேசிவிட்டு
'அவனெல்லாம் ஒரு ஆளா'
என்று
அடுத்தவனிடம் சொல்கிறான்!
அந்த அடுத்தவன்
என்னிடம் சொல்லமாட்டான்
என்ற நம்பிக்கையில்.
சொன்னாலும்
அடுத்த முறை
சிரித்துத் தொலைய வேண்டுமே
அந்த சில்லறையைக் கண்டால்!
3 - மண்
உதவி வேண்டி
நின்றார்கள்
ஒற்றைக்காலில்!
எங்கள் கால்களைக்
கழுவிக் குடிக்காதது
மட்டும்தான்
குறை!
தேவை முடிந்தபின்
உதறித் தள்ளி போனார்கள்
உட்கார்ந்து எழுந்தபின்
உள்ளங்கையால் துடைக்கும்
மண் போல!
4 - பாவம்
"ஆயிரம் தான் இருந்தாலும்
அவன் நம்ம ஆளு டா" என நினைப்பதாலோ? என்னவோ?
ஆடம்பரமாய் திரிகிறது
சில அறவேற்காட்டு நாய்கள்!
அடித்து விரட்ட ஆசைதான்!
ஆனால்
அடுத்தவன் அடித்தாலும்
நம்மிடம் தான் வந்து நிற்கும்!
5 - சுயம்பு
என்னை எதிர்த்து
தன்னை
பெரியாளாக்கிக் கொள்ள
நினைப்பவர்களே,
எனக்கான தேவைக்காக நிற்காமல்
நமக்கான சுயமரியாதைக்காக
நிற்பவன்தான் நான்!
சொல் புத்தி இல்லாமல்
சுய புத்தியோடு வாருங்கள்!
நம் சுயமரியாதையே
நாம் சேர்ந்து நிற்பதில்தான்!!
#பகத்சிங்

❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete🫂
Delete