காதல் நாடன்
"என்னப்பா.....எவ்ளோ நேரமா Call பன்றேன்!! எடுக்கவே மாட்ற".... என்னப்பா ஆச்சு! என்கிறாள் தழுதழுத்த குரலில் நீலா!
"கொஞ்சம் வேல பா... இப்போதான் Work முடிச்சு Manager-க்கு Report போட்டேன்.. அதான்பா கவனிக்கல... Sorry ப்பா" என்று தன் தணிந்த குரலில் சொல்லியவன், “சரி சரி என்னாச்சு ப்பா?” என்றான் முத்து!!
"உன்கிட்ட எத்தன தடவ சொல்லிட்டு இருந்தேன்!
வீட்ல மாப்ள பாக்க ஆரம்பிச்சுட்டாங்க....
எங்க வீட்ல வந்து பேசு!
உங்க வீட்லருந்து வந்து பொண்ணு கேளுங்கன்னு!! இப்ப பாரு, எங்க வீட்ல எனக்கு மாப்ள பாத்து, OK பண்ணிட்டாங்கபா....திருவோணம் பக்கம் எதோ ஒரு விடுதியாம்! திருப்பூர் பனியன் கம்பனில காண்ட்ராக்ட் காரனாம்.. நீ வந்து எங்க வீட்ல பேசுப்பா... எனக்கு பயமா இருக்குப்பா!!
என விசயத்தை சொல்லி முடித்தாள் நீலா!
"சரிப்பா... நீ கவலைப்படாத... நா இருக்கேன்... நா எங்க வீட்ல சொல்லி உங்க வீட்ல பேச சொல்றேன் பா.. நீ அழாத.." என ஆறுதல் சொல்லி அழைப்பை துண்டித்தவன்.. தன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறே, என்ன செய்யலாம் என யோசிக்கிறான்!
முத்து. 26 வயது கடந்த இளைஞன். ஊரில் நல்ல மரியாதையான ஆளுதான் இவனும். கிரிக்கெட் விளையாட்டில் பேட்டை பிடித்து இறங்கினால் ஒரு ஆட்டம்தான் ஆடுவான்! கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தின் 36 பஞ்சாயத்திலும் சரி, தஞ்சை, செங்கிப்பட்டி பக்கங்களிலும் சரி, "இவன் விளையாடாத ஊர் பாவம் செஞ்ச ஊர்" என்றே சொல்லலாம்! இவன் விளையாடிய பல ஊர்களில் இவன்தான் சிறந்த மட்டை வீச்சாளனாக தேர்வு செய்யப்படுவான்! அந்த அளவுக்கு நல்ல திறமையான வீரர்!
ஆசைகளை பூர்த்தி செய்யமுடியாமல் போனாலும், தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான ஊதியத்திற்கு, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவனுக்கு, விடுமுறை நாட்களில் நண்பர்களின் ஊர்களுக்கு சென்று, அவர்களுடன் சேர்ந்து மாட்டுக்கறி சமைத்துண்பது இவனுக்கும், இவன் கூட்டாளிகளும் பிடித்த செயல்!
நீலா..
இவனுக்கு 6 ஆண்டுகள் பழக்கம்.. இவன் பேருந்தில் வேலைக்கு சென்ற காலத்தில் அவளுக்காக இருக்கை பிடித்து கொடுத்ததில் முளைத்த நட்பு, காலப்போக்கில் காதலாக மாறியது!
நாளடைவில் ஒருவர் இன்றி இன்னொருவர் வாழ முடியாத அளவிற்கு காதல் பெருகியது! நீலாவின் தம்பி வீரமணியும்,முத்துவும் நீண்ட கால நண்பர்கள்! "அண்ணே....அண்ணே.." என்று முத்து பின்னாடியே வருவான்! முத்துவின் கிரிக்கெட் ஆட்டத்திற்கு இவனும் ஒரு ரசிகன்! ஒருகட்டத்தில் அக்காவும் முத்துவும் காதலிப்பது இவனுக்கு தெரியவர, அன்றுமுதல் அவன்தான் முத்துவுக்கு முதல் எதிரி! இருவரும் காதலிப்பது இவனுக்கு துளியும் பிடிக்கவில்லை! ஒருநேரத்தில் முத்துவை தீர்த்து கட்டக்கூட திட்டம் தீட்டியிருந்தான்! கூடவே பழகியவன் தன் அக்காவை காதலிப்பது தெரிந்தால், எந்த பையனுக்குத்தான் கோவம் வராது! ஆனால், முத்துவையும் அவன் ஊரையும் நினைத்து பயந்தவன், தன் எதிர்ப்பை நீலாவிடம் மட்டுமே காட்டிவந்தான்!
ஒருநாளில் மாலையில் முத்துவும்,நீலாவும் ஊர் பின்பக்கம் உள்ள தைலமரக்காட்டில் தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டிருப்பதை, நீலாவின் சித்தாப்பா பார்த்துவிட, அதை நீலாவின் வீட்டில் சொல்லி ஒரே பிரச்சனை!
"இவ திருந்தமாட்டா! என்னைக்கோ அவன்கிட்ட போய் வயித்துல வாங்கிகிட்டு வந்து நிக்க போறா....அன்னைக்கி இவள சிமிலி எண்ணைய ஊத்தி கொளுத்திப்புட்டு, நாமளும் எல்லாரும் தூக்குல தொங்க வேண்டியது தான்!" என சொல்லி இடுப்பு முந்தானையை உதறியவாறு திண்ணையில் அமர்ந்தாள் நீலா அம்மா செல்வராணி!
"போன வாரம் நாயித்து கெலம, வல்லத்துல கறிக்கடையில கறிவாங்கிக்கிட்டு நிக்கிறேன், அந்த பய என்னான்னா, என்ன இடிச்சுகிட்ட முன்னால போயி, 'அண்ணே மூல எலும்பு இருக்கா'ன்னு கேக்குறான்! எலும்ப வாங்கிகிட்டு திரும்பி வரும்போது 'நீ என்ன பெரிய ஆளுமையிரா'ன்னு கேட்குற மாதிரி என்னப்பாத்துட்டு போறான்! எனக்குன்னா கோவம்" வக்காலி அங்கயே அவன அறுத்து கோத்துருக்கணும்!. கையில ஒன்னும் காசோட்டம் இல்ல..இவள எங்கேயும் அனுப்பாம வீட்டு உள்ளயே பூட்டி வெப்போம்.. அடுத்த மாசம் மாப்ள வூட்டு ஆளுவல வர சொல்லுவோம்!" என்கிறார் நீலா அப்பா சங்கரன்!
இவர்கள் பேசுவதை கேட்ட நீலாவோ,
நினைவில் அவனை எண்ணி நிலாப்படியில் அமர்ந்து இருந்தாள். இது நடந்து சரியாக ஒரே மாதத்தில் பார்க்கப்பட்டவன்தான் திருவோணம் மாப்பிள்ளை.
முத்துவுக்கு நீலாதான் உலகமே! பொறுக்கியாய் திரிந்த முத்துவை பொறுப்பான பையனாக மாற்றியது நீலாதான்! நீலாவை ஒரு நிமிடம்கூட நினைவால் பிரிந்திருக்க மாட்டான்! நீலாவுக்கு பயப்படுவான்! நீலா சொல்வதைத்தான் கேட்பான்! நீலாவுக்கு பிடித்ததை செய்வானோ இல்லையோ, பிடிக்காததை ஒருபோதும் செய்யமாட்டான்! தன் எதிர்காலம் முழுக்க நீலாவை வைத்தே திட்டமிட்டு இருந்தான்! அவன் அவளை அவ்வளவு காதலிருக்கிறான், அவள் இவனை காதலிப்பதைப் போலவே!
நீலாவை எங்கு பார்த்தாலும் அக்கறையாக பேசுவாள். திருமணம் முடிந்து 20 வது நாளே தன் கணவர் வெளிநாடு சென்றுவிட்டதால், தன் அப்பா வீட்டில்லேயே வசிக்கும் அவள் எப்போதும் தம்பியின் பக்கம்தான். அப்பா அக்காவின் பக்கம். அப்பா நிதானமானவர். நன்கு யோசித்து ஒரு செயலை செய்பவர்! அண்ணண்காரன் ஏமாத்தியது போக, மிச்ச சொத்தில் வீடுகட்டி, பிள்ளைகளை படிக்கவைத்த மாமனிதன்! கடும் உழைப்பாளி! பிள்ளைகள் மீது சம அளவே பாசமாக இருந்தபோதிலும், சத்தியா சொல்வதையே முதலில் கேட்டுக்கொள்வார்!
ஆனால் அம்மாதான்?!..
மகமாயி. பெரிதாக ஒன்றுமில்லை. தன் அண்ணன் மகள் அமுதாவை முத்துவுக்கு கல்யாணம் செய்து வைப்பதே இவளின் ஆசை! குடும்ப விழாக்களில் அமுதாவை சந்திக்கும் போதெல்லாம், "வா மருமவள....நல்லாருக்கியா? என வாய் நிறைய கூப்பிட்டு நெகிழ்வாள்! அருகில் நிற்கும் முத்துவை ஓரக்கண்ணால் பார்ப்பதோடு சரி, அதைத்தவிர முத்துவுக்கும் அமுதாவுக்கு வேறு ஏதும் நட்புறவு கிடையாது! சத்தியா முத்து விசயத்தை வீட்டில் சொன்னதும் வீட்டில் ஒரே சலசலப்பு. "என்னாடி... சொல்லுற.. இந்த பய லவ்வு பண்ணுற அளவுக்கு பெரிய ஆளாயிட்டானா? பொழுதன்னைக்கும் தனியா ஒட்காந்து சிரிச்சிக்கிட்டே போன நோண்டம்போதே நெனெச்சேன்!" ன்னு மகமாயி கத்த, அங்காளி பங்காளிக உள்ள வந்து, ஆளுக்கு ஒன்றாய் பேச ஆரம்பித்தனர்! நீண்ட உரையாடல்களும், பேச்சுக்களும் தொடர, அனைவரின் முகமும் முத்துவின் அப்பா ஆறுமுகத்தை நோக்கியே இருந்தது!
"ரொம்ப ஆளுக போக வேணாம்.. ஆறுமுகம், கிடுகிட்டி வெள்ளையன், மாரிமுத்து அப்பறம் நா.... நாம போய் முதல்ல கேட்போம்"னு கோவிந்தன் சொல்லி முடிக்க, 'மக்யாநாளு' பொழுது நீலா ஊரில் விடிந்தது அவர்களுக்கு"
“ஏன்யா? உன் மவளும் எங்க பயலும் லவ்வு பண்ணுறாங்க.... ஊருக்கே தெரிஞ்ச விசயம்தானே! இப்ப முடியாதுன்னு சொல்ற?” ன்னு கிடுகிட்டி கேட்க..இடம் ஒரே களேபரமாக மாறியது.
"லவ்வுதா ஊருல எல்லா பயலுவளும் பண்ணுறாங்கெலே...எல்லாருமா கல்யாணம் பண்ணிக்கிறாங்க.. இதெல்லாம் வயசு கோளாறுதானே...விட்டுட்டு வேலைய பாருங்க.. எங்க பொண்ணுக்கு நாங்க எங்க பக்கமே மாப்ள பாத்துட்டோம்! நீங்க கிளம்புங்க" என்றான் நீலா சித்தப்பா செந்தில்..
"உங்க ஆளுகளுக்கெல்லாம் பொண்ணு கொடுக்க மாட்டோம் யா! 'அந்த நாட்டு' ஆளுகளுக்கு எல்லாம் எங்க பொண்ண கொடுத்தா, எங்க சொந்தக்காரபயலுவ ஒருத்தன் என்னைய மதிக்கம்மாட்டான்! எங்க பழக்கவழக்கத்துக்கு ஒத்துவராது..நீங்க கெளம்புங்க"....என சங்கரன் கும்பிடு போட..
"என்ன? அந்த நாடா? ஓ... மசுரு அப்புடி சுத்தி வாரியலோ! வக்காளியலா..உங்கள"..... என்று மாரிமுத்து ஆவேசமாக பேசும்போதே, மாரிமுத்தனை அமைதிப்படுத்தி
"சரி. வரோம்யா"ன்னு சொல்லிட்டு ஊருக்கு கிளம்பினார்கள் முத்து ஊரார்.
"அவஅவேன் சாதி உட்டு சாதி மாறியே கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்ல வாழுறானுங்க.. நம்ம வீரையன் மவன்....செட்டியாவூட்டு புள்ளைய கூட்டிகிட்டு வந்தான்.. போலீசு கேஸுன்னு என்னென்னமோ நடக்க போயி, கடைசில அந்தபுள்ள இவன்கூடதான் போவேன்னு சொன்னுச்சு! இன்னைக்கி நல்லாதானே இருக்கான்...அந்த புள்ளையும் சந்தோசமாதானே இருக்கு! ஏன், நம்ம மயிலன் மவ, துலுக்கம்பட்டி நாடன் பயல லவு பண்ணி கலியாணம் பண்ணிக்கிட்டுப்போனா... அடுத்தமாசம் அவ புள்ளையுளுக்கு காதுகுத்துண்ணு பத்திரிக்கை வந்து கெடக்கு..மயிலன் பங்காளிவீட்டு
பேர பூரா தாய்மாமன்ல போட்டு வச்சுருக்காங்க.." வெளக்கெண்ண.. என்னமோ அம்புநாடாம்... அந்த நாடாம்!! பேசாம நாலுபேர காலி பண்ணிப்டுவொமாயா!...இவையெல்லாம் கிடுகிட்டி வெள்ளையன் கொட்டி தீர்த்த ஆவேச வார்த்தைகள்!!
நீங்க வந்து பொண்ணு கேட்டுப்பாருங்க..குடுத்தா பாப்போம்..இல்லன்னா நா உன்னோட வந்துட்றேன்! நா Dress எல்லாம் Already Pack பண்ணி வச்சுட்டேன்! என்று முன்னவே நீலா சொல்லியிருந்தாள்!
#பகத்சிங்



சிறப்பு தோழர்.... வாழ்த்துக்கள் 🥰
ReplyDelete