நட்சத்திரம் மிளிர்கிறது
இது பா ரஞ்சித் அவர்களின் ஆறாவது படம்.
கடந்த படங்களில் தான் பேசிவந்த அரசியலை வேறு ஒரு திரைமொழியில் தவிர்க்க முடியாத விவாதமாகவும், தவிர்க்க முடியாத திரைப்படமாகவும் எடுத்துக்காட்டியுள்ளார் பா ரஞ்சித். காதலும் காதலுக்கு பின்னால் தடையாக.....இல்லை, காதலுக்கு முன்னால் தடையாக வந்து நிற்கும் சாதியையும், அதோடு பின்னிப்பிணைந்த அரசியலையும் எடுத்துரைத்துள்ளார்.
"ஒரு நாடகக்குழு, காதலை மையமாக வைத்து ஒரு நாடகம் எடுக்க முயற்சிக்கிறார்கள். அதில் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒரு பெண்ணும், இடைநிலை சாதியில் பிறந்த ஒரு ஆணும் காதலித்து, கடைசியில் இருவரும் திருமணம் செய்துகொள்வதுதான் கதை. பல தடைகளைத்தாண்டி அவர்கள் ஒன்றிணைய நாடகம் முடிகிறது."காதில் விசத்தை ஊற்றி கொலை செய்யப்பட்ட கண்ணகி-முருகேசன் இணையாரின் ஆணவக்கொலை, ரயில் தண்டவாளத்தில் வெட்டி வீசப்பட்டு தற்கொலையாக மாற்றப்பட்ட இளவரசனின் ஆணவக்கொலை, என சாதி இந்துக்களால் செய்யப்பட்ட ஆணவக் கொலைகளையும் அதற்கு பின்னால் இருக்கும் சாதி வெறி அரசியலையும் திரையில் காண்பித்துள்ளார். அப்படி காண்பித்த போதிலும்,
"ஆணவக்கொலைகளை செய்த சமூகத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மட்டும் முன்னிறுத்தி, விசிக தலைவர் "தலித்" இளைஞர்களை மூளைச்சலவை செய்து சாதி இந்துக்களின் பெண்களை காதலிக்க சொல்கிறார். இதை ஒரு வேலையாக வைத்து அவர்கள்தான் "நாடக காதல்" செய்கின்றனர்" என்கிற அப்பட்டமான பொய்யை பரப்பி, அதில் சாதி அரசியலை செய்தனர். அதைப்பற்றியெல்லாம் பேசாமல் போனது நிறைவாக இல்லாமல் போனாலும், காதலையும், அதன் பின்னால் இருக்கும் அரசியலையும் வைத்து ஒரு நாடகத்தை நடத்த தீர்மானிக்க, நாடகத்தில் நடிக்கும் கலைஞர்கள், அவர்களுக்குள் இருக்கும் காதல், அதாவது Lesbian, Gay, Transgender போன்ற காதல்களை வேறுபடுத்தி காட்டாமல், அதையும் இந்த சமூகப் பிரச்சினையோடு பின்னிப் பிணைத்து காட்டியுள்ளார். இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு காதல் கதைகளை வைப்பது இதுவே முதல் முறை!
நாடகக்குழுவில் பயணிக்கும் ஒரு இளைஞன், அந்த நாடக குழுவில் இருக்கும் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அதனை தன் வீட்டில் எடுத்துச் சொல்லும்போது, "உன் புள்ள ஒரு SC வீட்டு பொண்ண காதலிக்கிறானாம்!! " நம்ம மானம் கௌரவம் எல்லாம் போகப் போகுது! நம்மள ஊர்ல ஒருபய மதிக்க மாட்டாங்க!! பேசாம இவனை அறுத்து போட்டுடவேண்டியது தான்!" என்கிற காட்சி ஒன்று வருகிறது!
சாதி மாறி காதலிப்பதையே ஏற்றுக் கொள்ளாத மனநிலையில் இருந்த ஒரு இளைஞன், பொது சமூகத்தோடு இணைந்து காதல் பற்றிய அவனது எண்ணங்களை மாற்றிக் கொண்டு அதை வீட்டில் சொல்லும்போது, சாதி இந்துக்களின் மூர்க்கமான மனநிலை எப்படி இருக்கும்! அவன்வீட்டில் இதையெல்லாம் சொல்லி அவனை அடக்குகிறார்கள் என்பதை உண்மைத்தன்மையோடு காட்டியிருக்கிறார்.
இப்படி நகர கடைசியில் நாடகம் அரங்கேறும் சமயத்தில், ஒருவன் வருகிறான். "கலாச்சாரம் பண்பாடுதான் நமக்கு முக்கியம்! நம் கலாச்சாரத்தை நாம்தான் பாதுகாக்க வேண்டும்! என்றுசொல்லி கலவரக்காரர்களை ஏவி, நாடகத்தை அடித்து நொறுக்கி துவம்சம் செய்கிறான்! கலவரக்காரர்களில் ஒருவன், நெற்றியில் செந்தூரம் வைத்திருந்தான். காவி துண்டு அணிந்து காவி வேட்டி கட்டி இருப்பான். இதிலேயே சொல்லிவிட்டார் எவன் அந்த கலகக்காரன் என்று!! அவர்கள் நடத்தும் நாடகத்தில் கூட சாதி இந்துவும் தலித்தும் சேர முடியாமல் போகிறது.
வீரியமிக்க கதையில், இரண்டாம் பாகத்தின் திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்கிறது. பாடல்கள் பின்னணி இசை என எதுவும் மனதில் நிற்கவில்லை. சொல்லப்போனால் படத்தில் பாதி வெற்றிடத்தை இளையராஜாவின் பாடல்கள்தான் நிரப்புகிறது. ஒரு படத்துக்குள் இரண்டு திரைக்கதையை நகர்த்திய விதம் மிக நேர்த்தியாக இருந்தது.படத்தின் காட்சிகளில் ஆங்காங்கே வரும் புத்தர் சிலைகளும் அண்ணலின் படங்களும் வலிந்து திணித்ததாக தென்பட்டாலும், ஒவ்வொருமுறையும் அப்படங்கள் வரும்போதும் ஏதாவது ஒரு செய்தியை நமக்கு உணர்த்தும் விதமாகவே அமைகிறது!
அதுபோக இப்படத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்குள்ளேயே இருக்கும் சாதி பிரிவினைகளை பற்றி ஒரு காட்சியில் பேசியிருப்பார்கள்.
இது கந்தர்வக்கோட்டை கரம்பக்குடி பகுதியில் இருக்கின்ற பறையர் சாதிக்குள் இருக்கும் பிரிவினையை வெகுவாக நினைவு கூர்ந்தது. குறிப்பாக கந்தர்வகோட்டைக்கு மேற்கே வசிக்கும் பறையர்கள், கந்தர்வகோட்டை கிழக்குப் பக்கத்தில் இருக்கின்ற பறையர்களை தங்களை விட கீழானவர்களாக நினைப்பதுண்டு! இவர்களுக்கு இடையில் திருமண உறவு என்பது சாதி இந்துக்களுக்கும், தலித்துக்கும் நடக்கும் திருமணத்தைப் போல மிகவும் போராடித்தான் நடத்த வேண்டியுள்ளது.
"பார்ப்பான் முதல் பறையன் ஈறாக பட்டம் ஒழிந்தால்தான் சமூக மாற்றம் நிகழும்" என்கிறார் தந்தை பெரியார்.. ஆனால் இவர்கள் பறையர் சாதிக்குள்ளேயே பட்டத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்!
புரட்சியாளர் அம்பேத்கரைப் பற்றி இளையராஜா அவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியபோது, அன்று அதைப்பற்றி எதுவும் பேசாத பா.ரஞ்சித் "காதலின் மீதான புனிதத்தை உடைக்கிறேன்" என்று படத்தை எடுத்துவிட்டு, படம் நெடுகிலும் இசைஞானி இளையராஜாவின் மீதான புனிதத்தை மட்டும் போற்றி பாதுகாத்து வருகிறார்!
ஒரு கதையாக, நல்ல படைப்பை கொடுத்திருக்கும் ரஞ்சித், இது ஒரு நல்ல திரைப்படமாக எடுத்திருக்கிறாரா? என்பதை உணரமுடியவில்லை.
தோழமையுடன்...
பகத்சிங்
புனல்குளம்
09.09.2022
.jpeg)
.jpeg)
Comments
Post a Comment