ரைட்டர் அதிகாரமற்ற அதிகாரியின் குரல்.
"மீனவர் சங்கம்,ஓட்டுநர் சங்கம், கட்டுநர் சங்கம் என பல்வேறு சங்கங்கள் இருப்பதை போல காவலர்களுக்கென்றும் ஒரு சங்கம் வேண்டும்! சங்கம் வலிமைமிக்கது.காவல்துறை என்பது மக்கள் நலன் சார்ந்தது. என்றாலும், மக்களோடு தொடர்பில் இருப்பது கடைநிலை காவல் அதிகாரிகள்தானே தவிர, அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்ல!" என்கிற கோட்பாட்டு முழக்கத்தோடு இயங்கும் கம்யூனிச பின்புலம் கொண்ட, ஒரு காவல் நிலைய எழுத்தாளர் பணியாற்றி வருகிறார். சங்கம் அமைப்பது தொடர்பாக பல ஆண்டுகள் போராடி, இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்!
இப்படியாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு காவல் நிலைய எழுத்தாளரின் வாழ்வில் ஒரு இளைஞனை சந்திக்க நேரிடுகிறது. அவன் டெல்டா பகுதியில் வசிக்கும் தலித் கிறிஸ்தவ பின்னணி கொண்டவன். வேலைப்பளுவின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட காவல்துறை அதிகாரிகளை பற்றி ஆய்வு மேற்கொள்ளும் முனைவர் பட்ட மாணவன். தற்கொலை மரணம் பற்றிய இவனின் ஆய்வு வெளியே வந்தால் பல உயர் அதிகாரிகளும் அதில் சிக்கக்கூடும் என்கிற வகையில், அவனை மரணிக்க செய்ய, காவல்துறை பாணியில் சொன்னால் "போட்டுத்தள்ள" திட்டமிடுகிறார்கள்.
அதற்காக அவன் நக்சல்பாரிகளோடு தொடர்பில் இருப்பதாகவும், நாட்டுத்துப்பாக்கி, வெடிகுண்டுகள் போன்ற பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் இவர்களாகவே கட்டமைத்து அவனை கைது செய்வது, பிறகு கொல்வது என, கதை பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் இருக்கிறது!
இடையில் ஒரு வசனம் வரும், "SC கோட்டாவுல இருந்திருந்தா சீட்டு கெடைச்சு படிச்சிருப்ப.. அதுக்கும் வழியில்லை!!" என ஒரு வசனம் வருகிறது. மதம் மாறியதால் மட்டும் தங்கள் மீதான தீண்டாமை விலகவில்லை. ஒடுக்குமுறைகள் அகலவில்லை. அதனால் கல்வியிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.. எனவேபிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை தவிர்த்து தலித் கிறிஸ்தவர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை முன்னெடுப்பதாக தெரிகிறது...
இந்த இடத்தில் இட ஒதுக்கீட்டு வரலாற்றை நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன்.. இசுலாமியர்களுக்கு இருப்பதை போல கிறிஸ்தவர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டைப்பற்றி அவர்களிடம் கேட்டபோது, "தனி இட ஒதுக்கீடு வேண்டாம்! நாங்கள் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பங்குபெற்றுகொள்கிறோம்" என அப்போதைய கிறிஸ்தவ இயக்கங்கள் கூற, அதை தலைவர் கலைஞர் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலேயே இட ஒதுக்கீடு வழங்கினார்..
தற்போதிருக்கும் இயக்கங்கள் தலித் கிறிஸ்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என போர்க்குரல் உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
படத்தில் வரும் சரண்யா என்கிற பெண் அதிகாரியின் மீதான சாதி ரீதியான பாகுபாடும், அவரின் மரணமும் மறைந்த காவல் அதிகாரி விஷ்ணுபிரியா அம்மையாரை வெகுவாக நினைவுப்படுத்துகிறது! பாடல்கள் "சுமார்" ரகம் என்றாலும் பின்னணி இசை பல இடங்களில் பொருத்தமாக இருக்கிறது! சமீபத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரையில் எப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் நினைவில் நின்றதோ, அதே போல இப்படமும் அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் "ரைட்டர் பிரைட்டர்"
ச.பகத்சிங்.Bsc.IT
14.02.2022
புனல்குளம்
சிறப்பு தோழர்..💐👍
ReplyDelete