ஜெய் பீம்!! ஒடுக்கப்பட்டவர்களுக்காக..


சாதியின் அடிப்படையில் காவல்துறையினரால் பொய் வழக்கில் கைது செய்யப்படும் இருளர், குறவர் மற்றும் ஒட்டர் சமூக இளைஞர்கள் ஒரு புறமும், அதே சாதியின் அடிப்படையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்படாமல் காவல்துறையினரால் பாதுகாக்கப்படும் இடைநிலை சாதியினரும் என  அதிகார வர்க்கத்தில் இருக்கும் நபர்களின் சாதியப் பாகுபாட்டை வெளிப்படையாக காட்சிப்படுத்துவதிலிருந்து துவங்குகிற


து ஜெய் பீம்..


திருடன் என  காவல்துறையினரால்  குற்றம்சாட்டப்பட்டு, பொய் வழக்கில் கைதாகி தன் உயிரை இழந்த அப்பாவி இருளர் இளைஞர் ஒருவரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் நேர்மையான வழக்கறிஞராக நடிகர் தோழர் சூர்யா தனது கதாபாத்திரத்தை மிகச்சரியாக தேர்வு செய்து நடித்துள்ளார். ஆளும் அதிகார வர்க்கத்தின் தவறுகளை எந்த ஒரு ஒழிவுமறைவில்லாமல் அதே யதார்த்த முகத்தோடும் உண்மைத்தன்மையோடும் காட்சிப்படுத்தியதால் படம் எந்த இடத்திலும் தொய்வடையவே இல்லை. கதையின் விறுவிறுப்பும் குறையவில்லை.. 


சரி நாம் கட்டுரைக்குள் வருவோம்.


தோழர்களே! 

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் கைதிகளை போலீசார் நடத்தும் விதம், அவர்களுக்கு கொடுக்கப்படும் அவமரியாதை, போலீஸார் காட்டும் அதிகாரத்தின் திமிர் முகம், வர்க்க பாகுபாடு என உண்மையில் நடக்கும் அனைத்தையும் காட்சிப்படுத்துவதில் எந்த ஒரு சமரசமுமின்றி  காட்டியுள்ளனர். 


படத்தின் துவக்கத்தில் ஒரு பாடலின் நடுவே ஒரு காட்சி வரும். அதாவது குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி நடந்துகொண்டிருக்கும். அதில் நேதாஜி, காந்தி என அனைத்து  தலைவர்களின் வேடமும் அணிந்து குழந்தைகள் வந்திருப்பார்கள். உடனே கதாநாயகன் கேட்பார் "ஏன் இவ்வளவு தலைவர்களுக்கு மத்தியில் அம்பேத்கர் மட்டும் இல்லை என்று!!" இந்த சமூகத்தின் சாதிய பார்வையை பளிச்சென்று போட்டுடைத்தது போல இருந்தது. அனைத்து தலைவர்களும் பொது தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் அம்பேத்கரை இன்னமும் சாதித் தலைவராக பார்க்கின்ற பாகுபாடு தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலும் இன்றும் நிலவி கொண்டிருப்பது தான் உண்மை நிலை! 


உலகெங்கிலும் கொண்டாடக்கூடிய ஒரு தலைவர், உலகிலேயே அதிகம் படித்த மாமேதை, உலகில் பிற நாடுகளிலெல்லாம் ஒரு வழிகாட்டியாக கொண்டாடப்படும் தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர். ஆனால், இவர் பிறந்த இந்தியாவில் இவரது சிலைகள் நொறுக்கப்படுகிறது. அவமதிக்கப்படுகிறது. இவையெல்லாம் செய்வது ஏதோ சமத்துவம் பேசும் அரசியல்வாதிகளோ முற்போக்குவாதம் பேசுபவர்களோ கிடையாது. பிறப்பிலேயே சாதிவெறி ஊறிப்போய், அடிப்படை  அரசியல் அறிவற்ற சில மடையர்கள் தான் இதை செய்கிறார்கள்! அது அவர்களின் அறியாமை..

 அதேபோல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அன்றும் இன்றும் என்றும் உறுதுணையாக நிற்கும் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)  கட்சியினர்  என்பதையும், சாதியின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்ட இந்த சம்பவத்திற்கு, கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பு எவ்வளவு என்பதனை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். அதிகார வர்க்கத்தினரின் அடக்குமுறைகளுக்கு எதிராக, சாதிய பாகுபாடு காட்டும் இந்த சமூகத்திற்கு எதிராக, ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக நின்று அரசியல் களமாடும்  கம்யூனிஸ்டுகளை நாம் இன்றளவும் கண்கூடாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்!

 "கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்பது சாத்தியமில்லை என்பது எனது கருத்தும் கூட."

 

அதே போல எந்த ஒரு அரசியல் கட்சியின் பெயரையும் வெளிப்படையாக காட்டும் வழக்கம் தமிழ்சினிமாவில் கிடையாது. ஆனால், சமீபத்தில் வெளிவந்த 'சார்பட்டா பரம்பரை'யில் அது நிகழ்ந்தது.திமுக-அதிமுக என நேரடி அரசியலை கொஞ்சம் பேசியிருப்பார்கள். அதேபோல மலையாள சினிமாக்களில் கேரள காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என வெளிப்படையாக கட்சியின் பெயர்களை பயன்படுத்தி படம் எடுப்பார்கள். இப்போது இதேநிலை தமிழ் சினிமாக்களிலும்  வெளிப்படையாக அரசியல் கட்சிகளை பேச துவங்கியிருப்பது வரவேற்கத்தக்கது!


 ராசா கண்ணு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகரின் மெனக்கெடல் நிச்சயம் பேசப்பட வேண்டியது.


  "எட்டு தெரு இருளர் ஓட்டு போட்டு தான் நாங்க பிரசிடெண்ட் ஆனோமா?"

"நீயும் நானும் ஒரே ஊருனா ஒரே ஆளா?"

      என்பது போன்ற வசனம் எல்லாம் இன்றைக்கும் கிராமப்புறங்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் உண்மையான வசனங்கள் தானே..

 

 சமீபத்தில் மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர் பாபு மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் எஸ் பாலாஜி அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்தி சமூக வலைதளங்களில் பெரிதாகப் பேசப்பட்ட சகோதரி அஸ்வினி அவர்களுடைய நேர்காணலை பார்க்க நேர்ந்தது. 


"சோறு போட்டத இந்த நாலு நாளைக்கு பேசுவீங்க.. அதுக்கப்புறம் மறந்துடுவீங்க.. எங்க பிள்ளைங்களுக்கு சோற விடவும் படிப்பு தான் முக்கியம்! அதை கொடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணி குடுங்க!" என பேசியிருந்தார்.

இந்த திரைப்படத்தில் வரும் "அறிவொளி தீபம்" என்கின்ற ஒரு அமைப்பை சேர்ந்த பெண்மணி இருளர் சமூக மக்களுக்கு கல்வியை சொல்லிக் கொடுப்பார்!தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் வழங்கப்படுகின்ற இரவுநேர கல்வி என்பது அரசு சார்பிலும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

காவல்துறையினரின் அதிகார மீறலை மையப்படுத்தி அவர்கள் நடத்திய கொடுமைகளை மையப்படுத்தி உண்மை சம்பவத்தின் அடிப்படையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் கர்ணன். அதே வரிசையில் அதிகாரத்தில் இருக்கும் காவல்துறையினர் செய்யும் தவறுகளை வெளிக்காட்டி வெளிவந்திருக்கும் மற்றுமொரு திரைப்படம் ஜெய் பீம். காவல்துறையினர் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும். இதேபோல் காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட "வாச்சாத்தி வன்கொடுமை" போன்ற சம்பவங்களும் இங்கே நினைவுக்கு வருகிறது. 


இறுதியாக...

 "சட்டம் தன் கடமையைச் செய்யும் அது சரியானவர்களின் கைகளில் இருந்தால்" என்பதையும் உண்மைக்காக எந்த அளவு போராடுகிறோமோ அந்த அளவு வெற்றி கிடைக்கும் என்பதனையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கக் கூடிய ஜெய் பீம். ஜெய் பீம் என தலைப்பு வைப்பதற்கு ஒரு அறிவு வேண்டும்..துணிச்சல் வேண்டும்..கொள்கை தெளிவு வேண்டும்!


இவை அனைத்தும் ஒரு சேர அமைந்து உரக்க சொல்லியிருக்கிறார்கள் 

"ஜெய் பீம்" என..


தோழமையுடன் 

Sa.பகத்சிங் Bsc IT

புனல்குளம்

Comments

Post a Comment

Popular posts from this blog

மரப்பயணம்

திருமா திமுகவுடன் தான் இருப்பார்!!

அறம்