யுசுப் எனும் நண்பன்
எங்கள் ஊரில் நாங்கள் வைத்திருக்கும் பெட்டிக்கடையில் வழக்கம் போல உட்கார்ந்து வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தேன். சொந்த கடைதான் என்பதால் வருகின்ற யாராக இருந்தாலும் வியாபாரம் நோக்கிலேயே அணுக வேண்டியிருந்தது. ஊரின் பிரதான சாலையில் இருக்கும் பெரிய கடைகளை போல பெரிய கடையாக இல்லாவிட்டாலும், தெருவில் வசிக்க கூடிய மக்களுக்கு அன்றாட தேவைகளான பால் பாக்கெட், காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் மட்டுமே விற்கப்படும். அது போக சிறுவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய தின்பண்டங்கள் சிப்ஸ் வகைகள், கூல்ட்ரிங்க்ஸ் என அனைத்தும் இருக்கும்.
ஊரின் எல்லை பகுதியில் ஒரு பெரிய தனியார் தொழிற்சாலை இருக்கிறது. அதில் வெளி மாநிலத்தை சேர்ந்த பலரும் வேலை பார்க்கின்றனர். குறிப்பாக 18 வயது முதல் 40 வயதுடைய ஆட்கள் கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கிறார்கள். அதில் ஒருவருக்கும் தமிழ் தெரியாது. சிலர் அரைகுறை தமிழ் பேசுவார்கள்.. சினிமா நடிகைகளை போல! எங்கள் கடையில் அவர்கள் விரும்பி சுவைக்கும் தின்பண்டங்கள், இனிப்புவகைகள் போன்றவை இருப்பதனால், நம் கடை பக்கம் அடிக்கடி வருவார்கள். சுழற்சி முறையில் (Shift) வேலை பார்ப்பதால் எப்போதும் வெளி மாநில இளைஞர்கள் எங்கள் கடையை நோக்கி வந்த வண்ணம் இருப்பார்கள்.இரவு நேரம் தவிர..
என் சம வயது உடைய ஒருவனும் தினமும் வருவான். காலப்போக்கில் எனக்கு நல்ல நண்பனாக மாறிவிட்டான். அவன் பேசும் மொழி எனக்கு தெரியாது. நான் பேசுவதும் அவனுக்கு புரியாது. எனவே தெளிவான உரையாடல்கள் ஏதும் எங்களுக்குள் நடக்காது.ஏதோ எண்களுக்கு தெரிந்த சமிஞ்ஞை மொழியையும், தமிங்கிலீஷ் வார்த்தைகளையும் கலந்துபேசி பேசியே நண்பர்களானோம். மேலும் அவர்களுக்கு, நம்மூரின் ரேஷன் அரிசியின் மீது ஒரு தீராத பசி. சுவையும் வாசமும் பிடித்துப்போனதோ? என்னவோ?! இட்லிக்கு போக மீதம் எடுத்து வைத்திருக்கும் அரிசியை அவர்களுக்கு கொடுத்து விடுவோம். கிலோ எட்டு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை அரிசியின் தரத்தை பொருத்து வாங்கிக் கொள்வார்கள். எங்கள் பகுதியில் இருக்கும் அரிசியை வாங்கிக் கொடுக்கும் ஒரு இடைத்தரகராகவும் இருந்தேன்.
அவனும் தினமும் கடைக்கு வருவான்! கடையில் இருக்கும் Tv ரிமோட்டை அவனிடம் கொடுத்து விடுவேன். அவன் மொழி Channelகளை வைத்து பார்ப்பான். அவன் இரவில் கொண்டு வரும் சுட்ட ரொட்டியும்(சப்பாத்தி) கார சட்னியும் எனக்கு ரொம்ப பிடிக்கும்!
இடையில் ஒருநாள் வழக்கம் போல கடைக்கு வந்தான்.கடையை கவனித்துக்கொண்டே,
"ஏ!! பையா.. சலரி ...சலரி..
எத்தனை?" என்று கேட்டேன்.
அவன்
19,000 என எழுதி காண்பித்தான்.
திகைத்துப் போனேன்!! மேலும், இதே வேலைக்கு அவன் சொந்த ஊரில் 9000தான் சம்பளம் என்று கூறினான். மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. இப்படியே பேசிப் பேசியே அவனுக்கும் திருமணமாகி இருந்ததையும், ஒரு பெண் குழந்தை இருப்பதையும் தெரிந்து கொண்டேன் இப்படியே சென்று கொண்டிருந்தது எங்களின் நட்பு.
ஒரு ஞாயிற்றுக்கிழமை கடைக்கு அவனின் சகா ஒருவனுடன் வந்திருந்தான்.
வீட்டில் வழக்கும் புறாக்களை அவன் சகா பார்த்துக்கொண்டிருக்க, இவன் வழக்கமாக உட்காரும் பெஞ்சில் வந்து அமர்ந்தான். டிவி வால்யூமை குறைத்துவிட்டு எப்போதும் போல அவனிடம் பேச தொடங்கினேன்.
"என்ன லஞ்ச்?" என்றேன்.
"சிக்கன்.. கோழி.. கோழி" என்றான்.
"சாப்ட்டாச்சா" என்றேன்..
"ம்ம்ம்ம்"என்றான்..
"ஒன்லி சிக்கனா? நோ மட்டன்.. நோ பீஃப்(Beef)" என்று கேட்டேன்!
"பீஃப்" என்ற வார்த்தையை கேட்டவுடன் அவன் முகத்தில் தெரிந்த மாற்றம் சற்று வித்தியாசமாக இருந்தது!
"நோ!! நோ!!" என்றான்..
சிறிது நேரம் கழித்து மெல்ல எழுந்து அருகில் வந்து "இந்நேரம் என் ஊரில் இருந்திருந்தால் பீஃப் சாப்பிட்டு இருப்பேன்" என்று சொன்னான்!
சரி..அதனால் என்ன?
" மை ஹவுஸ், டுடேய் பீஃப்!" சாப்புர்ரியா? என்று கேட்டேன்!
"என் ரூம்லே எல்லாம் ஹிந்து"
நோ சான்ஸ்!!என்றான்.
சிரித்துக் கொண்டே அவன் பேச்சை கேட்டேன். அவன் அந்த ஊர் நிலைமையை விளக்கி சொன்னான்!
அதாவது அவன் மேற்குவங்கத்தை சேர்ந்தவன் என்றும், அங்கே முஸ்லிம்கள் மட்டுமே மாட்டுக்கறி சாப்பிடுவோம்! என்று சொன்னான். வேறு யாராவது உண்டால் இந்துக்கள் அவர்களை அடிப்பார்கள், கொலைவெறி தாக்குதல் நடத்துவார்கள். ஏன் கொலை கூட செய்யப்படுவார்கள்! எனவும் சொன்னான்..
அவன் ஊரில் இருக்கும் கட்சித் தலைவர்களை காவியம் பாடினான்!!
பின்பு,
"இங்கு எங்கே கிடைக்கும்?" என்று கேட்டான்!
மாடு அறுக்கும் இடத்தை சொன்னேன். "வேணும்னாக்க வாங்கி தரட்டா" என்று கேட்டேன்!
விழியை பெரிதாக்கி உடனே மறுத்த அவன், அவர்கள் தங்கியிருக்கும் அறையில் அனைவரும் இந்துக்கள் என்றும், அவர்கள் இருக்கும் இடத்தில் மாட்டுக்கறி சமைத்து சாப்பிட முடியாது என்றும் சொன்னான்!
இப்படியே நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் அந்த நேரம் பார்த்து, புறா கூண்டை கண்டுகொண்டிருந்த அவனின் சகா அருகில் வர,
"இந்து வரான்" என்று சொல்லி, பேசாதே!! என்பதை போல சமிக்கை செய்தான்!!
"இந்து வரான்"என்று அவன் சொன்னது, "யோக்கியன் வரான்...சொம்ப எடுத்து உள்ள வை" என்பதை போல இருந்தது!!சிரித்துக்கொண்டே அவனின் இந்து நண்பருக்கு வேண்டியதை எடுத்து கொடுத்துவிட்டு,
"ஈவினிங் வா"
"பீஃப் சாப்பிடலாம்"என்றேன்.
Ok என்று சொல்லி சென்றவன், மாலையில் வீட்டுக்கு வந்தான்! நான், மற்றும் எங்கள் வீட்டில் அனைவரும் யூசுப் உடன் சேர்ந்து, பீஃப் சாப்பிட்டோம்..
பெரட்டல் அருமை என்பதை சொல்லிவிட்டு அடுத்த shift க்கு சென்றான் யூசுப்...
Sa.பகத்சிங் Bsc IT
சிறப்பு, வடிவமைப்பில் கவனம் செலுத்தவும்
ReplyDeleteயோக்கியன் வரான்
ReplyDeleteஅருமை மச்சான்
ReplyDeleteAwesome you nailed it 💥
ReplyDeleteஅருமை தோழர்..
ReplyDeleteமுயற்சி வாழ்த்துகள்
ReplyDeleteSuper bro.. 🥰( beef mukiyam bigilu)
ReplyDelete