வேட்டி கட்டுவோம் வாங்க தமிழா!



இன்று வேட்டிகள் தினம். அதென்ன வேட்டிகள் தினம்.. வேட்டி தினம் என்றுதானே சொல்லவேண்டும்!..

வணக்கம் நண்பர்களே....

நம் மண்ணில் வேட்டி கட்டும் பழக்கம் என்பது நம்மிடையே தவிர்க்க முடியாத ஒரு சடங்காக மாறிவிட்டது. இதை ஏன் சடங்கு என குறிப்பிடுகிறோம் என்றால், மக்களுக்காக முன் நிற்கும் அரசியல் தலைவர்கள் தவிர, சடங்கு சம்பிரதாய முறைகளுக்கவே நம்மில் பலர் இங்கே அதிகம் வேட்டியை உடுத்திக்கொள்கிறோம்.

உதாரணமாக சொன்னால், அந்தந்த ஊரில் நடக்கும் விழாக்கள், முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே நம்மில் பலர் வேட்டி அணிந்து கொள்வது வழக்கம். இதில் யாரும் யாரையும் வேட்டி கட்டிக்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு பண்பாட்டின் அடையாளமாக, நீட்சியாகவே இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்!

நாகரீகத்தின் வளர்ச்சியால் மற்ற இடங்களில், மற்ற நேரங்களில் நமக்கு ஏதுவாக இருப்பது என்னவோ 'பேண்ட்' வடிவிலான உடைகள்தான்.

அதேபோல 'மாலை அணிவிப்பு' என்கிற சடங்குமுறையில் வேட்டி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கோவில்களுக்கு மாலை அணிவித்து கொள்ளும் பக்தர்கள் தங்களின் Seniority அடிப்படையில், நிறங்களை தேர்ந்தெடுத்து உடுத்திக்கொள்கின்றனர். சுப நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல்,துக்க நிகழ்வானலும், அங்கே வேட்டி ஒரு முக்கிய பங்காற்றுகிறது!

சரி..நமது பார்வையில் வேட்டி கட்டுவதை பற்றி சில கருத்துக்களை சொல்லிவிட்டு போவோம்!

இதற்கு முன்னர் பார்ப்பனியம் பற்றிய கட்டுரையில் சாதிய படிநிலைகளுக்கு இடையிலிருக்கும் வேட்டி கட்டும் முறையைப்பற்றி எழுதியிருந்தேன். அதாவது பார்ப்பனர்கள் கட்டும் 'பஞ்சகச்ச வேட்டிக்கும்', இடைநிலை சாதியினர் வரிந்து கட்டும் முறைக்கும், வயலில் வேலைபார்ப்பவர்கள், கூலித்தொழிலாளிகள் கட்டும் வேட்டிக்கும் வேறுபாடுகள் உண்டு என்பதை பேசியிருப்போம்!அதில் எந்த மாற்றுகருத்துமில்லை. ஆதிகாலத்தில் உடை ஏதும் அணியாத நாடோடிகளாகவே மனிதன் வாழ்ந்துவந்தான் என்பதே வரலாறு!! நாகரீக வளர்ச்சியினால் மனிதனுக்கு உடை என்பது உடலை மறைக்க தேவைப்பட்டது. உடை என்பது பல கட்டங்களை தாண்டி, அந்தந்த நிலத்திற்கும் தட்பவெப்ப நிலைக்கும் தகுந்தார்போல் உருமாறியது. இதில் பிற்காலத்தில் வேட்டி என்பது ஆதிக்கத்தின் குறியீடாகவும் மாறிப்போகிறது!

இன்னும் பின் நாட்களில்,அரசியல் தலைவர்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்றார்போல 'கரைவேட்டி' கட்டும்  பழக்கமும் வந்துவிடுகிறது. இன்றுவரை அது தொடர்கிறது. வேட்டி எப்படி ஒரு அடையாளப்படுத்தப்பட்ட உடையாக மாறி இருக்கிறதோ அதேபோல தோளில் அணியும் துண்டுக்கும் தனி அடையாளம் உண்டு! 

முன்பொரு காலத்தில் ஆதிக்க சாதியினரை எதிரில் கண்டால், அவர்கள் வரும்பொழுது ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் தோளில் இருக்கும் துண்டை எடுத்து கை அக்குளில் வைத்துக்கொண்டோ அப்படி இல்லை என்றால் இடுப்பில் கட்டிக் கொண்டு அவர்களை கையெடுத்து கும்பிட வேண்டும்!! இப்படிப்பட்ட ஒரு நிலை கடந்த நூறாண்டுகளில் மாறியிருப்பதே நமக்கு ஆறுதலான விடயம் தான்!

"கும்பிடுறேன் சாமி" என்று சொல்லும் முறை கூட பின்னாளில் சுயமரியாதை இயக்கங்கள் வந்துதான் சீர்திருத்தம் செய்து வணக்கம் எனும் சொல்லை அறிமுகப்படுத்தினார்கள். அதாவது 'நமஸ்காரம்','கும்பிடுறேன் சாமி' என்ற  நிலையை மாற்றி வணக்கம் என்கிற சமத்துவச் சொல்லை நமக்கு அறிமுகம் செய்தார்கள்!

அதாவது நமஸ்காரம் என்பது சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் பயன்படுத்திய சொல். கும்பிடுறேன் சாமி என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் இடையில் இருந்த சொல்லாடல்.இதனை உடைத்து "வணக்கம்" என்பதே சமத்துவம் என கற்பித்தது திராவிட இயக்கங்கள் தான்! 

ஆதிக்க சாதியினரை கண்டவுடன் ஒடுக்கப்பட்ட மக்களின் இடுப்பில் இருந்த துண்டு மற்றும் கை அக்குளுக்குள் செல்லப்பட்ட துண்டுகள், சுயமரியாதை இயக்கங்கள் வந்த பின்னரே இங்கே தோளில் துண்டு அணியும் வழக்கம் ஏற்பட்டது!!

சுயமரியாதை இயக்கங்கள் தான் தனது பிரச்சார மேடைகளில் பொதுக்கூட்டங்களில் வருபவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கும் பழக்கத்தையும் அறிமுகம் செய்தது. அதுவும் தோளில் துண்டு அணிவது ஒரு சுயமரியாதை என்று நமக்கு சொல்லிக் கொடுத்ததும் திராவிட இயக்கங்கள்தான்! தோளில் அணியும் துண்டு, கைத்தறி நெசவில் செய்யப்பட்ட துண்டாக இருப்பின் நெசவாளர் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக, உதவிகரமாக இருக்கும் என்பதற்காகவே தங்களது கூட்டங்களில் இந்த கைத்தறியில் செய்த துண்டுகளை அவர்கள் அதிகம் அணிவித்து வந்தனர்

ஒவ்வொரு சடங்குகளும் சம்பிரதாயங்களும் நாகரீக வளர்ச்சி மேம்பட மேம்பட காலப்போக்கில் அது சிறிதளவு நீர்த்துப்போகின்றது. ஆனால் பண்பாடு கலாச்சாரம் என்கின்ற வகையில் மீண்டும் அது நம்மிடையே கட்டாயமாக திணிக்கப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை. குறிப்பாக சொல்லப்போனால், இந்த தமிழர் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் என்கிற இந்த மாதிரியான செயல்களில் வேட்டி கட்டுவது என்பது ஒரு மிக முக்கியமான ஒரு சடங்காக இங்கே காண முடியும்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் "Funபாடு" "Claச்சாரம்" என்றவுடன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வரும் தமிழர்கள் இடையில் அவ்வப்போது காணாமல் போய் விடுகிறார்கள்!

சாதியின் பெயரைச் சொல்லி தமிழ்நாட்டில் நடக்கும் சாதி கலவரங்களின் போதெல்லாம் வாய் திறக்காத தமிழர்கள், ஆணவக்கொலை என்ற பெயரில் ஒரு தமிழனை மற்றொரு தமிழன் வெட்டிக் கொல்லும் போது கள்ள மௌனம் காக்கும் தமிழர்கள்! தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய சாதி சண்டை மதக்கலவரங்களின் போதெல்லாம் வாய் திறக்காத தமிழர்கள், மத்திய அரசால் மாநில சுயாட்சிக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளின் போதெல்லாம் ஊமையாய் இருக்கும் தமிழர்கள், எப்போது வெளிவருகிறார்கள் என்றால் மாடு கட்டவும், ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் Copyright செயல்களில்தான், தமிழன் என்கிற உணர்வோடு வெளிவருகிறார்கள். அதிலும் ஜல்லிக்கட்டில் மாடு பிடிக்க வரும் தமிழர்களால், அங்கே அறிவிக்கப்படும் சாதிப்பெயர்களை நீக்க சொல்லி குரல் கொடுக்கமுடிவதில்லை! அங்கே தமிழன் என்கிற உணர்வு சாதி உணர்வாக சுருங்கிப்போகிறது!!

இறுதியாக.....

நண்பர்களே.. ஆடை என்பது உடலை மறைக்கத்தானே தோன்றியது. இன்றுஅது ஒரு ஆதிக்கத்தின் குறியீடாக,வர்க்க வேறுபாட்டை உணர்த்தும் ஒன்றாகவும் உருமாறி நிற்கிறது!!


#பகத்சிங்

06.01.2021

Comments

Popular posts from this blog

மரப்பயணம்

திருமா திமுகவுடன் தான் இருப்பார்!!

அறம்