என்ன செய்தார் இளையராஜா!

 எனது அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம்.

அரசியல் கட்டுரைகளின் நீட்சியாக கலைத்துறையில் ஏதேனும் எழுத வேண்டும், அதிலுள்ள அரசியல் பார்வைகளை இங்கே பதிவிட வேண்டும் என்கிற நோக்கில் இப்போது நான் எழுதியிருக்கும் கட்டுரை இது! என்னை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் இளையராஜாவின் இசைக்கு நன்றி சொல்லி உரையாடலாம் வாருங்கள்! 




இசைஞானி இளையராஜா போற்றுதலுக்குரியவரா? இவர் துறையை கடந்து இவர் சாதித்தது என்ன? இசை மேதையாக இருந்தும் இவரால் இன்னும் 'சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஏன் பெற முடியவில்லை?' என்றெல்லாம் நாம் இங்கே பேச இருக்கின்றோம் நண்பர்களே! இசைஞானி போற்றுதலுக்குரியவரா? என்றால் உண்மையில் இவர் இல்லாமல் போயிருந்தால் இரண்டு தலைமுறை தமிழர்கள்,தங்களின் சோகம்,அழுகை,தவிப்பு,பாசம்,நட்பு,மகிழ்ச்சி போன்ற பல உணர்வுகளை பகிர்ந்துகொள்ள, "மனிதனுக்கு மாற்று இல்லாமல் போயிருக்கும்". இதேபோல வரும் தலைமுறையினருக்கும் ஒரு மிகப்பெரிய இழப்பாகவே இருந்திருக்கும்.இத்தனைக்கும் மேலே இசை பற்றிய அறிவை நாம் இழந்திருக்கக்கூடும்!


ஆம் நண்பர்களே, நான் ஒரு இளையராஜா இசையின் ரசிகன் என்பதை தாண்டி, சமூக அக்கறை கொண்ட, எழுத்தாளனாக, கலா ரசிகனாக இளையராஜாவைப்பற்றி எழுதாமல் போவேனேயானால், கலை மீதான கவனமின்மை என்கிற போக்கிலும், சமூகத்திற்கு இவர் செய்த சிலவற்றை மறைப்பதை போன்ற போக்கிலும் சென்று முடியும்.இளையராஜா என்கிற பெயர் Title Card ல் இடம்பெற்றாலே 100 நாட்கள் ஓடிய படங்கள் ஏராளம்.சினிமா,பணம்,புகழ் என்பதை தாண்டி இளையராஜா எனக்கு வேறு வடிவில் தெரிகிறார்! திரைத்துறையில் கட்டுண்டு கிடந்த சில நடைமுறைகளை தகர்த்தெறிந்தவர் என்றும் சொல்லலாம்!

உதாரணமாக, மிகவும் சவாலான 'சிம்பொனி' என்கிற இசை நிகழ்ச்சியை செய்து முடித்ததன் மூலம் இளையராஜா என்பவர்,தமிழ்நாடு தாண்டி, இந்தியாவை கடந்து, ஆசியாவிலேயே ஒருத்தர் என்கிற நிலையை அடைகிறார்! அதாவது ஆசியாவிலேயே சிம்பொனி செய்த ஒருத்தர் இசைஞானி மட்டுமே ஆவர்!

நிற்க,

நாம் இளையராஜாவிற்கான விளம்பரதாராரோ, அல்லது இவரின் பெயரில் சம்பாதிக்கும் நபர்களோ இல்லை. அவரின் இசையின் ரசிகன். இசையில் இவர் செய்த சில ஆச்சர்யங்களை இங்கே பட்டியலிடுவதே நமது நோக்கமே தவிர வேறொன்றுமில்லை நண்பர்களே!

இளையராஜா என்ன செய்துவிட்டார்?

இளையராஜா எங்கே ஒரு முழுமையான வெற்றியாளனாக மாறுகிறார்?

என்பதை நாம் இங்கே விரிவாக பார்க்கப்போகிறோம்.


தற்கால இசை.

தற்கால இசை அல்லது நவீன இசையென்பது  சப்தங்கள் நிரம்பியும், சந்தங்கள் குறைந்தும் காணப்படுகிறது! தெளிவில்லாத, நுட்பமில்லாத ராகங்கள், பின்னணி இசையில் காட்சிக்கும் பாடலுக்கும் சம்பந்தமில்லாத இசைக்கோர்வைகள் என ஒரு முரண்பாடுகள் நிறைந்தவர்களாக இங்கே இடம்பெறுகின்றன.இசையில் நவீன இசை என்பது இசைஞானி கொண்டுவந்ததே ஆகும். MSV ,KV மகாதேவன் போன்றவர்களின் நீட்சியாகவே இங்கே நாம் இசைஞானியையும் பார்க்க முடியும். ஆனால் 'இளையராஜாவின் நீட்சி' என்று இங்கு நாம் யாரையுமே சொல்ல முடியாது.உண்மையில் அதற்கான ஆள் இல்லை என்பதே உண்மை!


முன்பொரு காலத்தில், "போராடும் மக்களுக்கு இளையராஜா இசை என்ன செய்தது?" ஆந்திராவில் 'கத்தார்' என்பவர் தனது இசையின் மூலமாக உழைக்கும் மக்களுக்காக முழங்குகிறார் என்கிற வாதம் முன்வைக்கப்பட்டது!இதற்கு பின்நாளில் இளையராஜா அவர்கள் வேறு ஒரு பேட்டியில் சொன்ன பதிலே இவரின் மீதான இதுமாதிரியான விமர்சனங்களுக்கு பதிலாக அமைகிறது!

"திரை இசை என்பது ஒரு ஏமாற்று! கோடி கோடியாய் கொட்டி படம் எடுக்கும் முதலாளிக்கு தேவை புல்லரிக்க வைக்கும் இசையே தவிர, புரட்சிகர இசை அல்ல! " இப்படி சொன்னவர் மேதகு இசைஞானி இளையராஜா! 


இசைஞானியும் அவதூறுகளும்.

இளையராஜா என்றவுடன் சில முற்போக்குவாதிகள் வைக்கும் முதல் குற்றச்சாட்டு என்பது 'இளையராஜா பார்ப்பனிய மயமாகிவிட்டார்!' என்பதும், இளையராஜாவை சாதிய கண்ணோட்டத்தில் பார்க்கும் சிலர் இளையராஜா ஒரு 'அகந்தை' உடையவர் என்பதுமாகும்! இது இரண்டுமே சரியான புரிதலா என்பதை நாம் சில வரலாற்று நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்! இன்னும் சொல்வேயோமானால், அனைத்தையும் கடந்த உச்ச நட்சத்திரம் இசைஞானி.


*இளையராஜா பார்பனியமயமாகிவிட்டாரா?

பார்பனியம் என்பது தனக்கு நிகராக எதையுமே வளரவிடாத ஒரு கோட்பாடு. அல்லது அதை மீறி வளர்ந்த ஒன்றை தன்வயப்படுத்திக்கொள்வதே அதன் வேலையாகும்! ஆக,இதை நாம் நுட்பமாக ஆராய கௌதம புத்தரின் காலம்வரை செல்ல வேண்டும். ஆம்! புத்தரின் காலத்திலிருந்தே பார்ப்பனியம் என்பது தனக்கு நிகராக வளரும் ஒன்றை 'எதிர்த்து அழித்தல்,அல்லது உள்வாங்கி செரித்தல்.' என்கிற அடிப்படையிலானது என்பது நமக்கு விளங்கும்! இதற்கு இளையராஜா மட்டும் விதிவிலக்கல்ல! மேலும் நான் மேலே குறிப்பிட்டதை போல,KV மகாதேவன், MSV  போன்றோரின் நீட்சியாகவே இசைஞானியை பார்க்கிறன். ஏனென்றால்,அவர்களுக்கும் இறை நம்பிக்கை உண்டு!அந்த வகையில் இசைஞானியார் என்பவர் கடவுள் நம்பிக்கை உடையவராய் இருப்பதில் எனக்கு ஒன்றும் ஆச்சர்யமோ, நெருடலோ இல்லை நண்பர்களே!

இருந்தாலும் சிறீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு இளையராஜா கொடுத்த 8 லட்ச ரூபாய் வாங்கிகொண்ட பார்ப்பனியம்தான், அவரை உள்ளே அனுமதிக்காமல் அவமதிப்பு செய்தது! இதை இளையராஜாவும் புரிந்துகொள்ள வேண்டும்!! 


*இளையராஜா யாரையும் மதிக்கமாட்டார் என்கிற வாதமெல்லாம் இளையராஜாவை பிடிக்காத சிலர் அவரின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அவர்மீது வைக்கும் குற்றச்சாட்டாகும்! யாரையும் மதிக்காதவர்தான் , ஆஸ்கர் விருது பெற்ற ரஹ்மானுக்கு பாராட்டு விழா நடத்தினாரா? அவ்வளவு ஏன்,சமீபத்தில் கூட லண்டன் பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த இசைவாணியை அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்து இருந்தார்!எவரையும் மதிக்காமல் எப்படி ஒருவரால் 1000 படங்களுக்கு மேல் இசையமைக்க முடியும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்!


*கம்யூனிசம் பேசவில்லை!

இளையராஜாவை வளர்த்துவிட்டது கம்யூனிச மேடைகள். ஆனால் இளையராஜாவோ கம்யூனிசம் பற்றி பேசுவதே இல்லை என்கிற குற்றச்சாட்டும் இவர்மீது வைக்கப்படும் முதன்மை குற்றச்சாட்டுகளில் ஒன்று! முதலில் இளையராஜா என்பவர் ஒரு இசைக்கலைஞர். அவர் இசைக்கலைஞர் என்பதாலேயே  கம்யூனிச மேடைகளில் பாடியிருக்கிறார். இதற்காக அவர் செல்லுமிடமெல்லாம் கம்யூனிசம் பேச வேண்டிய அவசியம் இல்லை. உண்மையில் இங்கு இருக்கும் கள யதார்த்தம் என்னவென்றால் கம்யூனிஸ்டுகள் யாரும் இளையராஜாவை சொந்தம் கொண்டாடவும் இல்லை. இளையராஜாவும் தன்னை வளர்ந்துவிட்டது கம்யூனிச மேடைகள் என்பதை மறைத்ததும் இல்லை. 


புரட்சி ராஜா!

முற்போக்குவாதிகள் செய்யாத பல வேலைகளை,அறிந்திடாத நுட்பங்களை திரையிசையில் செய்து முடித்தவர் இசைஞானி இளையராஜா! அவைகளை நாம் சற்று வேகமாக வாசித்து அறிந்துகொள்வோம்!

சமீபத்தில் கவிஞர் வைரமுத்து-ஆண்டாள் மிக சர்ச்சையானது! அவர் ஆண்டாளை பற்றி இலக்கியத்தில் என்ன இருக்கிறதோ அதை  மட்டுமே குறிப்பிட்டு இருப்பர்! அதையே பொறுத்துக்கொள்ளாத பார்ப்பனீயம் அவர்மீது 'சோடா பாட்டில்' வீச துணிந்தது!

ஆனால், இசைஞானியோ, தலைமுறை தலைமுறையாக ஒரு குறிப்பிட்ட ராகத்தில் மட்டுமே பாடப்பட்டு வந்த தியாகராஜ ஆராதனையை வேறு ஒரு ராகத்தில் மாற்றி இசையமைத்தவர் இளையராஜா. அதாவது, காம்போதி ராகத்தில் இருந்த வார்த்தைகளை மட்டும் எடுத்து சாருமதி ராகத்தில் நிரப்பி ஓர் மாபெரும் வேலையை 'சிந்து பைரவி' படத்தில் செய்கிறார்! இதற்கு எவ்வளவு பெரிய அறிவு வேண்டும்! எவ்வளவு பெரிய துணிச்சல் வேண்டும்! 

பறையிசை! ஒடுக்கப்பட்ட மக்களின் இசை!அந்த மக்களை போலவே ஒடுக்கப்பட்டு கிடந்த பறையிசையை திரையில் ஒலிக்க செய்தவர் இசைஞானி!அதாவது ஒரு பார்ப்பனிய குடும்ப பாடல் காட்சியில் 'வாங்கோண்ணா அட வாங்கோண்ணா' என்கிற பாடலுக்கு பறையிசையை வைத்து மெட்டமைத்து இருப்பார்! 'பறையடிப்பது' என்பதை 'பறை வாசிப்பாக' மாற்றியவர் இளையராஜா! மலையூர் மம்பட்டியான் படத்தில் வரும் 'காட்டுவழி போற புள்ள' பாடலில் பறையை ஒரு Classic Rythmஆக வைத்திருப்பர்! ஒருதலை காதலர்களின் தேசிய கீதமான 'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி''  பாடலின் மத்தியில் கிராமிய உடுக்கை இசையை பயன்படுத்தி பிரமிக்க செய்திருப்பார்! அலை ஓசை படத்தில் புரட்சி தெறிக்கும் 'போராடடா....ஒரு வாளேந்தடா.. பாடலின் மத்தியில் 'தந்தன தந்தன' என்கிற மலைவாழ் மக்களின் இசையை மிக பொருத்தமாக இடம்பெற செய்திருப்பார்! 'பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா' பாடலில், 'வண்ணார்' மக்களின் துணிதுவைக்கும் ஒலியை இசையாக வைத்திருப்பர்! இதையெல்லாம் முதலில் செய்தது இசைஞானியார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் நண்பர்களே! 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே' என்கிற பாடலில் துவக்கத்தில் 'கும்மி' எனும் நாட்டுப்புற இசையில் துவங்கி,பின்னர் கர்நாடக மிருதங்கம், அதன்பின்னர் மேற்கத்திய Chorus  என்கிற நுட்பமான இசைக்கோர்வையை வெளிப்படுத்தியிருப்பார்!

கருநாடக இசைவாத்தியங்களை மட்டுமே அதிகம் பயன்படுத்திவந்த காலத்தில், மேற்கத்திய பியானோ, ஆப்ரிக்காவின் டிரம்ஸ் போன்ற கருவிகளோடு, எளிய மக்களின் உடுக்கை,பம்பை,பறை போன்றவற்றை திரையில் கலந்து தெறிக்கவிட்டவர்! 'விருமாண்டி' படத்தில் கருமத்தூர் காட்டுக்குள்ளே எனும் பாடல் 'நவீன முறையில் அமைக்கப்பட்ட வில்லுப்பாட்டு' என்றே சொல்லலாம்! நான் கடவுள் படத்தில் இடம்பெற்ற 'ஓம் சிவோகம்' பாடலில் உடுக்கையின் மிரட்டலில் துவங்கி அந்த பாடல் முடியும் வரை  வெளுத்து வாங்கியிருப்பார்!

'ஜனனி ஜனனி' என்கிற பாடலையெல்லாம் என்னை போன்ற இறை மறுப்பாளரும் மீண்டும் மீண்டும் கேட்க காரணம் இசைஞானி என்பவரின் இசை மட்டுமே!

முடிவுரை.

ஒருவரை துறை சார்ந்த விமர்சனம் செய்வதற்கு, அந்த துறை சார்ந்த அறிவு நமக்கும் இருக்க வேண்டும்! தற்போது இருக்கும் திரையிசையை விமர்சிக்க 'நான் ஒரு இசைஞானியின் ரசிகன்' என்கிற தகுதி போதுமென்றே எண்ணுகிறேன்! இவ்வளவு வேலைப்பாடுகளை செய்திட்ட அவரால் ஒருமுறை கூட 'சிறந்த இசையமைப்பாளருக்கான' தேச விருதை பெற முடியவில்லை!  அதற்கான காரணம் நாம் அனைவரும் அறிந்ததே!

துணை நின்றவை.

1.2005 சனவரி மாதம் வெளிவந்த 'ஈரநிலம்' மாத இதழ்

2.முதல் ஆறு பக்கம் இல்லாத 'இசைஞானி இளையராஜா' எனும் நூல்

மற்றும் சில தரவுக்கட்டுரைகள்.

                                                   தோழமையுடன் 

                                                     S.பகத்சிங்

21.12.2O2O



Comments

  1. Excellent 👌👌👌👌👌
    Keep rocking

    ReplyDelete
  2. சிறப்பு. தற்காலத்துக்கு தேவையான கருத்தோட்டம். எனது இளையராஜாவின் இசை பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள் நூலையும் ஒருமுறை வாசிக்கவும். அது இளையராஜா குறித்து புரிதலை இன்னும் அதிகமாக்கும். நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மரப்பயணம்

திருமா திமுகவுடன் தான் இருப்பார்!!

அறம்