திரைப்படம் காட்டும் பெண்ணியம்.

வணக்கம் நண்பர்களே! புதிதாக எதையாவது எழுத வேண்டும் என்கிற நோக்கில், பார்வையை சற்று வித்தியாசப்


படுத்தி பார்க்கலாம்! என்கிற கோணத்தில் நம்மில் பலரின் நேரத்தில் ஒரு பகுதியையும்,நம் சிந்தனைகளின் பெரும்பகுதியையும் திருடிக்கொண்டிருக்கும் சினிமாவில்,குறிப்பாக திரைமொழியில் பெண்கள் எவ்வாறு காட்சிப்பொருளாக,வணிகப்பொருளாக  காண்பிக்கப்படுகிறார்கள், என்பதை எழுதியிருக்கிறேன்! சொல்லப்போனால்,சினிமா என்பது 'கேளிக்கை,பொழுதுபோக்கு' என்பதை தாண்டி, இங்கே என்ன மாதிரியான  உளவியல் பார்வையை நம்மிடையே உருவாக்கி இருக்கிறது என்பதை இங்கே நாம் பேச வேண்டி இருக்கிறது! சினிமாவிலும்,சின்னத்திரை விளம்பரங்களிலும் பெண்களை காட்சி பொருளாக மையப்படுத்தி,வணிக ரீதியிலான லாபத்தை அடைந்துகொள்கின்றனர். திரைகள் முழுவதும் பெண்கள் மயமாகி இருக்கிற போதிலும்,பொதுவெளியில் இன்றுவரை பெண்களால் பாதுகாப்பாக இருக்க முடிகிறதா? யாரரெல்லாம் குற்றவாளிகள்? இதைப்பற்றி பலரும் பேசி வருகின்றனர்.என்றாலும், பெண்களின் பாதுகாப்பின்மைக்கு சினிமா ஒரு முக்கியமான 'மறைமுக காரணி' என்பதே எனது வாதம்!

 

#கவர்ச்சி

முதலில் ஒருவரின் நிறம்,எடை உள்ளிட்ட உடல் அமைப்பு என்பதும், அவரவரின் மரபுவழிக்கேற்ப இயற்கையாகவே அமைந்த ஒன்று! இதில்,ஒருவரின் நிறத்தையும்,உடல் அமைப்பையும் வைத்து அவரவரின் தன்மை தீர்மானிக்கப்படுவதென்பது  சரியான பார்வையாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது!(முப்பாலருக்கும் பொருந்தும்). சமீபகாலமாக நமது தமிழ் சினிமாவில் Two Piece காட்சிகள் அதிகமாக காண்பிக்கப்பட்டு வருகிறது. இதில் பெண்களின் குறிப்பிட்ட சில உடல்பாகங்களை காட்சிப்பொருளாக்கி, அதை கொஞ்சம்  Glamour ஏற்றி, அதை காட்சிப்படுத்தி, பிறகு அதற்கான பாடல் வரிகளை இட்டு நிரப்பி, அதன் மூலமாக தங்கள் Marketஐ ஏற்றிக்கொள்கிறார்கள். வெறுமனே உடல் பாகங்களை, அரைகுறை ஆடைகளுடன் காண்பித்து இங்கே நடித்துவரும் நடிகைகளும் உண்டு. மேலும் சின்னத்திரையில் காட்டப்படும் விளம்பரங்களிலும் அதிக அளவிலான கவர்ச்சியான காட்சிகளை நம்மால் காணமுடிகிறது. இதை நாம் ஆபாசம் என்று அடையாளப்படுத்தும் போது, அதை ஏற்றுக்கொள்ளாமல், 'படத்தை படமாக பாருங்கள்,திரையரங்கை விட்டு வந்தவுடன் அனைத்தையும் மறந்துவிடுங்கள்' என்பது முதலான வாதங்களை சிலர் முன்வைக்கிறார்கள்.

நிற்க.. "அது அந்தந்த நடிகைகளின் உடல்கள்.அவர்கள் உடலை காண்பித்து நடிப்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.அவர்கள் எப்படியோ நடித்து அதற்கான ஊதியத்தை பெற்றுக்கொள்கிறார்கள்! இதில் நமக்கு என்ன பிரச்சினை?" என்று யாரவது கேட்பீரேயானால், அது பகுத்தறிவு அல்ல! பாதி அறிவுதான் நண்பர்களே!

எப்படியென்று சொல்கிறேன் நண்பர்களே, "இந்த மாதிரியான காட்சிகளை பெரிய திரையிலும்,சின்னத்திரையிலும் பார்த்தபின்பு, பார்வையாளர்களின் பார்வையானது அந்தந்த திரைகளோடு(Screen) நின்றுவிடுவதில்லை. மாறாக அவர்களின் பார்வையானது அன்றாடம் வேலைக்கு செல்லும் அலுவலக பெண்களின் மார்புத்திரையையும், கூலி வேலைக்கு சென்று பேருந்துகளில் வீடு திரும்பும், சாமானிய பெண்களின் மார்புத்திரையையும், சாலைகளில் பேருந்திற்காக காத்திருக்கும் பெண்களின் மார்பையும்,தொப்புளையும் நோக்கி பாய்கிறது! இதனால் அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்கும் நடிகைகளுக்கு எந்தவித பாதிப்பும் பொதுவெளியில் ஏற்படப்போவதில்லை! அவர்கள் தங்களின் உடல் பாகங்களையும்,அமைப்பையும் முன்னிலைப்படுத்தி நடித்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்.ஆனால் இதன்மூலம் நேரடியான பாதிப்புக்குள்ளாவது நம் வீட்டின் பெண்கள்தான் நண்பர்களே! மேலும் நமது மனதில் இது எந்தமாதிரியான ஒரு எண்ணத்தை நம்முள் விதைக்கிறது என்றால், பெண்களின் உடல் பாகங்களின் மீதான ஆவலையும், அவர்களின் உடல் அமைப்பை தரமதிப்பீடு செய்வதற்கான கேவலமான அபாயத்தையும் நம்முள் விதைக்கிறது! இதனால் பெண்கள் தங்கள் திரைகளை இழுத்து மூடிக்கொள்வதில் மட்டுமே கவனமாக இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு,இயல்பாக இருக்க முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள்!

#90களின் சினிமா.

80-90 காலகட்ட சினிமாவானது,சாதி ஆதிக்கம், நிறைவேற்றுமை,பெண்ணடிமைத்தனம் முதலியவை அதிக அளவில் காட்சிப்படுத்தப்பட்ட காலம். இதே காலங்களில் தான் "பண்ணையார்" எனப்படுகிற நிலப்பிரபுத்துவத்தை ஆதரிக்கும் படங்களும் அதிக அளவில் எடுக்கப்பட்டு வந்தது!

இதில், என்னவோ இந்த "பண்ணையார் புடுங்கிகள்" சிலர் தங்கள் நிலத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு பணம்,நெல்,உடைகள் முதலியவற்றை வாரி வழங்குவதை போலவும், இவர்களின் இல்ல விழாக்களுக்கு செல்லும்போதெல்லாம் "சீர்" என்கிற பெயரில், தங்கள் கைகளில் உள்ள நகைகளைக்கூட கழற்றி கொடுப்பதை போலவும் காட்சியமைக்கப்பட்டிருக்கும்! பண்ணையார் என்பவன் கிட்டத்தட்ட கடவுளுக்கு நிகராக போற்றப்பட்டு இருப்பார்கள்.

ஆனால், தாங்கள் பார்த்த வேலைக்கு கூலியாக வழங்கப்பட்டு வந்த நெல்லின் அளவில், கால் படி நெல்லை கூலி உயர்வாக கேட்டதற்காக, சாதி ஆதிக்கத்தில், பண திமிரில்,  தஞ்சை மாவட்ட கீழ்வெண்மணியில் குடிசையில் வைத்து எரித்துக்கொள்ளப்பட்ட அப்பாவி தொழிலார்களின் போராட்ட வாழ்வையும், சாணிப்பால் குடிக்கும் தண்டனையையும், காண்பிக்க தவறிய 'பண்ணையார் சினிமா', மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலார்களை சுட்டுக்கொன்ற காவல்துறையின் கொடுமைகளை காட்டத்தவறிய சினிமா, மாறாக எதை காண்பித்தது என்றால்,

"நிலமுடையாரின் வீடுகளில்,வயல்களில் வேலைபார்க்கும் பெண்களின் உடை கிழிந்திருக்கும்! அதை பார்க்கின்ற பண்ணையாருக்கு அந்த பெண்ணின் மீது மோகம் வரும். பிறகு...விளக்கதேவையில்லை! பண்ணையாரின் மகனின் மூலமாக அங்கெ வேலைபார்க்கும் பெண்களுக்கு ஏதாவது அநீதி இழைக்கப்படும்போது, அந்த பெண்ணையே தனக்கு மருமகளாக ஏற்றுக்கொள்ளும் பண்ணையார், இது மாதிரியான பொய்யான காட்சிகளே அதிகம் இடம்பெற்று வந்துள்ளது! இதனால் பார்வையார்களின் மனநிலை என்னவாகும்! என்பதை நாம் உணர வேண்டும் நண்பர்களே!

#பாடல் வரிகள்

தமிழ் சினிமாவின் பெரும்பாலான பாடல்கள் வணிக நோக்கில் வெற்றியடையவே எழுதப்படுகிறது. இதில் பெண்களின் உடல் பாகங்களை வர்ணனை என்கிற பெயரில் "வார்த்தைகளால் வன்கொடுமை" செய்யாத கவிஞர்கள் மிக குறைவானவர்களே! வக்கிரமான வரிகள்,உடல் உறுப்புகளை மலை,வாழைத்தண்டு,பூ முதலியவற்றோடு ஒப்பீடு செய்வது.

'எப்படி எப்படி சமைஞ்சது எப்படி?'

'பிரம்மனுக்கு மூடு வந்து உன்ன படைச்சிட்டான்'

'உன்னால மூடாச்சு'.......

                         இன்னும் இதைப்போல எத்தனை வன்மமான வரிகள். 

அப்பப்பா!! 

என்ன கருமம்டா இதெல்லாம்! 

அதுபோக பாடலாசிரியர்கள் எழுதும் பாடல்களுக்கான கருத்துக்கள் என்பது சங்க இலக்கியத்தில் இருந்தும், பெண்களின் உடல்பாகங்களில் இருந்துமே பெரும்பாலும் எடுக்கப்படுகிறது என்பதே கசப்பான உண்மை நண்பர்களே! ஒருவேளை இவ்விரண்டும்  இல்லையென்றால் இந்த பாடலாசிரியர்கள் எல்லாம் பிழைப்புக்கு என்ன செய்வார்களோ என்று எண்ணதோன்றுகிறது! அந்த அளவுக்கு ஆபாசமான இரட்டை அர்த்த பாடல்வரிகள் இருக்கின்றது.

#இன்னும் சில காட்சிகள்.

'ஒரு சமூகத்தின் வளர்ச்சியென்பது அந்த சமூகத்தில் பெண்கள் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதை வைத்தே அளவிட வேண்டும்' என்பது புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சொல்லியிருப்பது. பெண்களும் உழைத்தால்தான் முன்னேற்றம் காண முடியும் என்பதே இன்றைய 'Trend' ஆனால், சில சினிமாவில் காட்டப்படுவது என்னவென்றால்,

 *மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கு தகாத தொடர்பு இருப்பதை போலவும்,

*அலுவலகங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கும், அவரை அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுநர் போன்றவர்களின் மேல் காதல் வருவதாகவும்,

*ஆசிரியை ஒருவருக்கும் மாணவருக்கும், காதல் இருப்பதை போலவும்,

*பள்ளி பருவ  குழந்தைகளின் காதல்....

இதெல்லாம் படிக்கும்போது எதோ பாலிமர் செய்தி பார்ப்பதை போலவும்,  தினத் தந்தியின் மூன்றாவது பக்கத்தை படிப்பதைப்போலவும் ஒரு அனுபவத்தை கொடுக்கிறதா! அப்படியென்றால் நீயும் என் தோழனே!

 

#விளம்பரங்களில்

 

"அம்மா துணி துவைக்கிற சோப்பு சீக்கிரம் கரைஞ்சிடுது!

அம்மா டீ போடுறாங்க!

அம்மாவுக்கு இடுப்பு வலி!

பொண்ணு குளிக்கிற சோப்ப மாத்தணும்!"

இதுமாதிரி பெண்களை வணிக நோக்கில் மைய்யப்படுத்தியே பெரும்பாலான விளம்பரங்கள் ஒளிபரப்பபடுகிறது! குழந்தை பராமரிப்பு போன்ற ஒருசில செயல்களில் பெண்ணை மையப்படுத்தி எடுப்பதை கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் இங்கே பெண்களை வணிக நோக்கில் மைய்யப்படுத்தி விளம்பரங்கள் எடுக்கப்படுகின்றது! குறிப்பாக நகரத்து பெண்கள் முகப்பூச்சுகளை அதிகம் விரும்புவதை போலவும், அவர்கள் ஆண்களின் சட்டை,தலைமுடி,வாசனை திரவியம் உள்ளிட்ட பொருட்களால் ஈர்ப்புக்கொள்வதை போலவும் காட்சியமைக்கப்பட்ட்டிருக்கும்!

      நண்பர்களே.. பெண்களுக்கான சொத்துரிமை,பாலின சமத்துவம் போன்ற முற்போக்கான விழிப்புணர்வுடைய செய்திகளை காட்சிப்படுத்தாத சினிமா, இதுபோன்ற காட்சிகளையே அதிகம் காட்டிவருகிறது. நமது பார்வைகளை சற்று தெளிவுபடுத்திகொள்வோம்..அறிவை விரிவுபடுத்திக்கொள்வோம்!

நன்றி

தோழமையுடன்

பகத்சிங்.

25/11/2020

Comments

  1. அருமையான பதிவு தோழர் 🖤

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மரப்பயணம்

திருமா திமுகவுடன் தான் இருப்பார்!!

அறம்